search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேட்ட விமர்சனம்"

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - சிம்ரன் - திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `பேட்ட' படத்தின் விமர்சனம். #Petta #PettaParaak #Rajinikanth #Rajinified
    ஊட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார் பாபி சிம்ஹா. கல்லூரியையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அராத்து பண்ணுகிறார். இந்த கல்லூரியில் தான் சனத் ரெட்டியும், மேகா ஆகாஷும் படிக்கிறார்கள். இந்த நிலையில், அந்த கல்லூரிக்கு வார்டனாக வரும் ரஜினிகாந்த், பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அடக்கி, கல்லூரியையே மிரள வைக்கிறார். 

    இவ்வாறாக பேட்ட ரஜினியின் ஆட்டம் ஆரம்பமாக, ரஜினி மீது கோபமாக இருக்கும் பாபி, சந்தர்ப்பம் வரும் போது ரஜினியை பழிவாங்க எண்ணுகிறார். இதற்கிடையே நவாசுதீன் சித்திக்கின் ஆட்கள் சனத் ரெட்டியை கொல்ல முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து ரஜினி, சனத் ரெட்டியை காப்பாற்றுகிறார்.



    இவ்வாறாக தனது பேட்டயை விட்டுவிட்டு, வார்டனாக வரும் ரஜினி, சனத் ரெட்டியை காப்பாற்றினாரா? ரஜினி ஏன் வார்டனாக வந்தார்? அவரது முன்கதை என்ன? சனத் ரெட்டி யார்? நவாசுதீன் சித்திக் ஏன் சனத்தை கொல்ல நினைக்கிறார்? அதன் பின்னணியில் என்ன? நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    சூப்பர் ஸ்டார் என்பது வெறும் வார்த்தை இல்லை என்பதை காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார் ரஜினி. பயமறியா சிங்கமாக, படத்தில் எந்த இடத்தில், எந்த நேரத்திற்கு, என்ன வேண்டுமோ அதை மட்டும் கொடுத்து ரசிக்க வைத்துச் செல்கிறார். பழைய ரஜினியை பார்க்க ஆசைப்படுவோருக்கு இந்த படம் ஒரு மெகா விருந்து என்று தான் சொல்ல வேண்டும். கிராமத்து கெட்-அப், இளமையான தோற்றம் என மாஸ் காட்டிச் செல்கிறார்.



    நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி இருவருமே வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். ரஜினியின் நண்பனாக சசிகுமார் மதுரைக்காரராக சிறப்பாக நடித்துள்ளார். சிம்ரன், திரிஷா ரஜினி ஜோடியாக முதல்முறை திரையில் தோன்றினாலும், இருவருமே ரஜினிக்கு சிறந்த ஜோடிதான் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். அதிலும் சிம்ரன் கொஞ்சும் பேச்சில் ரசிகர்களின் இதங்களை கொள்ளை அடிக்கிறார். மாளவிகா மோகனனுக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம். படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்.

    கல்லூரியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் காட்சி, ரஜினியிடம் அடங்கும் காட்சி என பாபி சிம்ஹா சிறப்பாக நடித்துள்ளார். மேகா ஆகாஷ் அழகாக வந்து செல்கிறார். கதையின் ஓட்டத்திற்கு சனத் ரெட்டி முக்கிய காரணமாக வருகிறார். முனிஸ்காந்த், நரேன், ராமசந்திரன் உள்ளிட்ட மற்ற அனைத்து கதாபாத்திரங்களுமே கதையின் போக்குக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளார்கள்.



    தான் ஒரு ரஜினி ரசிகர் என்பதை கார்த்திக் சுப்புராஜ் அப்பட்டமாக நிரூபித்திருக்கிறார். ரசிகர்கள் ரஜினியை எப்படி எல்லாம் பார்க்க எண்ணினார்களோ அப்படியே திரையில் காட்டியிருக்கும் கார்த்திக் சுப்புராஜூக்கு பாராட்டுக்கள். தான் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை கார்த்திக் சுப்புராஜ் நிரூபித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து எடுத்திருக்கிறார். ரஜினியின் ஆட்டம், பேச்சு, நடை, உடை, ஸ்டைல், வசனம், சிரிப்பு என அனைத்திலும் முழு ரஜினியிசத்தை உணர வைக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையுமே சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். எனினும் படத்தின் நீளத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். சிறப்பான முயற்சி.



    அனிருத் இசையில் பாடல்கள் வேற லெவல். பின்னணி இசையின் மூலம் ரஜினியிசத்தை உணர வைக்கிறார். திருவின் ஒளிப்பதிவு அபாரம். ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார்.

    மொத்தத்தில் `பேட்ட' சூப்பர்ஸ்டார் படம். #Petta #PettaReview #Rajinikanth #PettaFromToday #PettaParaak #Rajinified #PettaFDFS #Simran #Trisha #Sasikumar #VijaySethupathi #NawazuddinSiddiqui

    ×